Thursday, January 28, 2010

இவன்

சோம்பல் முறித்து, கண்கள் கசக்கி ,
கட்டில் விடுத்தது, காலணி அணிந்து,
வெளிப்படுவான் ஒரு நத்தைபோல்!

மணி பத்தாச்சா? பொய்யாய் வியப்பான்,
புழுதி பறக்க படிகள் கடந்து,
தெருவிலிறங்கி நடப்பான்!

1/2 தேனீர், வெண்குழல் வற்றி,
ஓசி பத்திரிக்கை, ஓரிரு விவாதம்,
இனிதே முடித்து அறை திரும்புவான்!

நேர்காணல் இன்றா? தேர்வேதும் உண்டா?
யோசனை, விசாரிப்பும் பலமாய்,
பணிக்கான கனவில் வாழ்வான்!

ஞாயிறு, திங்கள் பேதமின்றி,
வாழ்க்கை போகும் பாதை எண்ணி,
நிதம் பீச் மணலில் தவமிருப்பான்!

பணமும் பாசமும் தொலைவிலிருக்க,
மனமும் மானமும் போய்திரும்ப,
வீட்டுக்கடனும்,  தங்கை முகமும்,
வெளிநாடு என்னும் முடிவைத்தரும்,

திருவல்லிக்கேணி எங்கும் இப்படியே!
எத்தனையோ 'இவன்'கள் இங்கே இப்படியே!
ஓடுகிறது  காலமது இப்படியே!
முடிந்திடுமோ 'இவன்' வாழ்க்கை இங்கே இப்படியே??...

Sunday, January 24, 2010

சுவடுகள்

அப்போதெல்லாம் வருடம் ஒருமுறை
எங்கள் ஆற்றில் வெள்ளம் நிச்சயம்!
கரை புரண்டோடும் ஆற்று நீரில்
மரங்களெல்லாம் பூக்கள் உதிர்க்க,
அங்கே மலரும் எங்கள் உலகம்!

மீன் பிடிக்கத் தூண்டில்,
மரக்கிளை வீசி பந்தயம்,
கரையோரக் குளியல்,
கப்பலாகும் அரசிலைகள்,

வீடும் பசியும் மறந்திருப்போம்!
திட்டும் அடியும் மறக்கவில்லை!

ஆறு, ஏரி, கிணறு, வயல்வெளி...
தினம் ஒன்றாய் திட்டமிடுவோம்,
இருட்டும் வரை அங்கேயே வட்டமிடுவோம்,

இன்று!
எப்போதோ ஒரு நாள் மழையும்  வருதாம்,
கரைகளை அது நனைத்துப்  போகுதாம்,
விளையாட பிள்ளைகள் ஒருவரும் இல்லையாம்,
பிள்ளைகள் ஒருவருக்கும் விளையாட்டே இல்லையாம்,

மைதானமான ஏரியில் இனி,
மட்டைப் பந்து மட்டுமே சாத்தியமாம்,
விவசாய நிலமெல்லாம் இனி,
தொழிற்சாலை கட்ட உத்தியாம்,

வற்றிய ஆற்றில் ஒழுகும்
கண்ணீராய் அதன் சுவடுகள்!
சுற்றி அலைந்தும் தென்படவில்லை
தண்ணீரில் கரைந்தனவோ என் சுவடுகள்?

இனி எங்கனம் விட்டுச் செல்வேன்
அடுத்த தலைமுறைக்கான என் சுவடுகள்?

போராட்டம்

தினம் தினம் காலை
இதே போராட்டம்தான்!

அவள் ஓரப்பார்வை, குறு நகை கிட்டாவிடில்,
அன்றைய பொழுது வீண்தான்!
புன்னகை நீளாதா?
முறைசொல்லி அழைக்க மாட்டாளா?
காத்திருந்தே அலுவல் வாகனம் மறப்பேன்!

இதோ இன்றும்
கடிகாரம் பார்த்தபடி காத்திருக்கிறேன்,
கள்ளி அவள் இன்னும் துயில் எழவில்லையோ?
பொறுமையின்றி எட்டிப்பார்க்கையில்,

கனவுக் குதிரையில் மிதந்தபடி,
நான் காத்திருப்பது அறியாமல்,
உறங்குகிறாள் என் பிள்ளை!..