Thursday, January 28, 2010

இவன்

சோம்பல் முறித்து, கண்கள் கசக்கி ,
கட்டில் விடுத்தது, காலணி அணிந்து,
வெளிப்படுவான் ஒரு நத்தைபோல்!

மணி பத்தாச்சா? பொய்யாய் வியப்பான்,
புழுதி பறக்க படிகள் கடந்து,
தெருவிலிறங்கி நடப்பான்!

1/2 தேனீர், வெண்குழல் வற்றி,
ஓசி பத்திரிக்கை, ஓரிரு விவாதம்,
இனிதே முடித்து அறை திரும்புவான்!

நேர்காணல் இன்றா? தேர்வேதும் உண்டா?
யோசனை, விசாரிப்பும் பலமாய்,
பணிக்கான கனவில் வாழ்வான்!

ஞாயிறு, திங்கள் பேதமின்றி,
வாழ்க்கை போகும் பாதை எண்ணி,
நிதம் பீச் மணலில் தவமிருப்பான்!

பணமும் பாசமும் தொலைவிலிருக்க,
மனமும் மானமும் போய்திரும்ப,
வீட்டுக்கடனும்,  தங்கை முகமும்,
வெளிநாடு என்னும் முடிவைத்தரும்,

திருவல்லிக்கேணி எங்கும் இப்படியே!
எத்தனையோ 'இவன்'கள் இங்கே இப்படியே!
ஓடுகிறது  காலமது இப்படியே!
முடிந்திடுமோ 'இவன்' வாழ்க்கை இங்கே இப்படியே??...

Sunday, January 24, 2010

சுவடுகள்

அப்போதெல்லாம் வருடம் ஒருமுறை
எங்கள் ஆற்றில் வெள்ளம் நிச்சயம்!
கரை புரண்டோடும் ஆற்று நீரில்
மரங்களெல்லாம் பூக்கள் உதிர்க்க,
அங்கே மலரும் எங்கள் உலகம்!

மீன் பிடிக்கத் தூண்டில்,
மரக்கிளை வீசி பந்தயம்,
கரையோரக் குளியல்,
கப்பலாகும் அரசிலைகள்,

வீடும் பசியும் மறந்திருப்போம்!
திட்டும் அடியும் மறக்கவில்லை!

ஆறு, ஏரி, கிணறு, வயல்வெளி...
தினம் ஒன்றாய் திட்டமிடுவோம்,
இருட்டும் வரை அங்கேயே வட்டமிடுவோம்,

இன்று!
எப்போதோ ஒரு நாள் மழையும்  வருதாம்,
கரைகளை அது நனைத்துப்  போகுதாம்,
விளையாட பிள்ளைகள் ஒருவரும் இல்லையாம்,
பிள்ளைகள் ஒருவருக்கும் விளையாட்டே இல்லையாம்,

மைதானமான ஏரியில் இனி,
மட்டைப் பந்து மட்டுமே சாத்தியமாம்,
விவசாய நிலமெல்லாம் இனி,
தொழிற்சாலை கட்ட உத்தியாம்,

வற்றிய ஆற்றில் ஒழுகும்
கண்ணீராய் அதன் சுவடுகள்!
சுற்றி அலைந்தும் தென்படவில்லை
தண்ணீரில் கரைந்தனவோ என் சுவடுகள்?

இனி எங்கனம் விட்டுச் செல்வேன்
அடுத்த தலைமுறைக்கான என் சுவடுகள்?

போராட்டம்

தினம் தினம் காலை
இதே போராட்டம்தான்!

அவள் ஓரப்பார்வை, குறு நகை கிட்டாவிடில்,
அன்றைய பொழுது வீண்தான்!
புன்னகை நீளாதா?
முறைசொல்லி அழைக்க மாட்டாளா?
காத்திருந்தே அலுவல் வாகனம் மறப்பேன்!

இதோ இன்றும்
கடிகாரம் பார்த்தபடி காத்திருக்கிறேன்,
கள்ளி அவள் இன்னும் துயில் எழவில்லையோ?
பொறுமையின்றி எட்டிப்பார்க்கையில்,

கனவுக் குதிரையில் மிதந்தபடி,
நான் காத்திருப்பது அறியாமல்,
உறங்குகிறாள் என் பிள்ளை!..
 

Friday, December 11, 2009

மகள்

குளிர்மலர் முகமதில்,
குறுநகை கனியே!
பஞ்செனும் கையதில்,
நகமது பிறையே!

சுடர்விழி பார்வையதில்,
ஈர்ப்பது விசையே!
வளி செல்லும் நாசியதில்,
கவர்வது கனிவே!

எங்கள் தேவதை இவளே!
எங்கள் தேவையும் இவளே!

இனியொரு பிறப்பினும்,
இவளே மகளாய்!
அமைந்திட வரமே,
அருள்வாய் இறைவா!...

Tuesday, November 24, 2009

ஓர் இரவு

ஊளையிடும் நாய்,நரியின் ஓசைக்கும்,
சலசலக்கும் மரங்களின் பாடலுக்கும்,
கவனமாய் தலையசைத்தபடி,
அங்கொன்றும் இங்கொன்றுமாய் நிழலுருவங்கள்.

என்றோ கூடிகழித்த போகியின் நினைவாய் புகை மூட்டம்,
குளிருக்கும் மனதிற்கும் இதம் தான் போலும்!.

இயந்திர துப்பாக்கியை அவ்வப்போது துடைத்தபடி புகை வழியும் வாயோடு,
இன்றோ நாளையோ! இறையோ பலியோ!  தயாராய்...

படித்து படித்து கிழிந்தே போன காதலியின் கடிதம் கையிலிருக்க,
வழியும் கண்ணீரிலும் சலனமற்ற  கவனமாய்!.

இவர்களின் உலகம் தனிதான்...

தோட்டா உரசிச்சென்ற காயமுண்டு!
பலர் உருப்பிழந்த சோகமுண்டு!
உடல் சிதறிப்  போனதுண்டு!
பலர் உயிரற்றே மாண்டதுண்டு!

நாடுகள் ஆடும் சதுரங்கம்,
இவர்களல்லவோ பகடைகள்!
கூடுகள் விட்டு பிரிந்து வந்த,
சிறகில்லா பறவைகள்!

யார் அறிவார் இவர் மனதின் ஆழங்கள்?
யார் அறிவார் இவர் மனதின் சோகங்கள்? 
இப்படியே நீளும் இந்த இரவும் சொல்லும்...
இனி
எல்லையில்லா தேசம் ஒன்றே மனிதம் நல்கும்!.

Friday, November 13, 2009

என் ஜன்னல்

திறந்தே வைத்தேன் என் அறையின் ஜன்னலை...

அவள் மேனி தொட்ட காற்று என் சுவாசம் வருமென்று!
வந்தமரும் சிறு பறவை அதில் தூது வருமென்று!
வாசல் தெளிக்கச்  செல்கையில், பல் துலக்கியபடி புன்னகைக்க!
மொட்டை மாடி துணி உலர்த்தயில் ஓரப்பார்வை விழு மென்று!
திறந்தே வைத்தேன் என் அறையின் ஜன்னலை!.

ஊரெல்லாம் பண்டிகை கேளிக்கையில், நான் மட்டும்
ஜன்னலோரம் தனித்திருந்தேன் அறியாததேனோ?
எட்ட நின்றே ரசித்தாலும், அவளருகில்
நிழலாய் நானிருந்தேன் உணராததேனோ?

காற்றுக்கும், பறவைக்கும் புரிந்த என் காதல்,
கள்ளி அவளின் நெஞ்சிற்கு புரியாததேனோ?
காத்திருந்த போது வந்த கவிதையெல்லாம்
கண்ணீரால் அழிந்தது தெரியாததேனோ?

போதும் போதும்
இனி பொறுத்தல் ஆகாது! என் ஜன்னல் கூட பொறுமை காக்காது!
சொல்லி விடலாம் என்றெண்ணிய போது
சொல்லியே விட்டாள் அவள் "எனக்கு கல்யாணம் அவசியம் வாங்க"..

அப்போதிலிருந்து,
என் அறையின் ஜன்னலை மூடியே வைக்கிறேன்..
எங்கேனும் ஒளிந்து கொண்டிருக்கும் அவள் மேனி தொட்ட காற்றும்
அவளை போல் என்னை நீங்கி விடக்கூடாதென்று...

Tuesday, November 3, 2009

கனவு

ஒரு மாலைநேர பேருந்து பயணம்,
ஜன்னலோர இருக்கை,
சற்றே கண்ணயர்ந்தேன்...

அடர்ந்த காடு அவள் கையைப்பற்றி இழுத்தபடி
தலைதெறிக்க ஓடுகிறேன்...

வாகனம் ஒன்றில் முன் இருக்கையில் நான்
பின் இருக்கையில் அவள்
முத்தமிடுகிறேன் உதட்டில்...

பக்கம் வரச்சொல்லி  பாவனை செய்கிறாள் அவள்
அருகில் நெருங்கி முகம் பார்த்து பூரிக்கையில்...

சட்டென அடித்த brake-ல் நெற்றி வீங்கியது,

'சாவு கிராக்கி'
குறுக்கே புகுந்த ஆட்டோக்காரனை திட்டினார் ஓட்டுனர்,
நானும்...!